×

தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் கருப்பு கொடி கட்டிய மக்கள்: சேலம் அருகே 4 நாட்களாக பரபரப்பு

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லிகுந்தம் ஊராட்சியில் உள்ளது வன்னியனூர் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிப்பட்டி, மல்லிகுந்தம், உப்புபள்ளம், மருக்கம்பட்டி கிராமங் களை சேர்ந்த 286 குழந்தைகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக சிவகுமார்(45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி, சிவகுமார் வாழதாசம்பட்டி பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மறுத்தனர். பெற்றோரும் கடந்த 3நாட்களாக பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வன்னியனூர் கிராமத்தின் நுழைவு வாயிலில் கருப்பு கொடி கட்டிய மக்கள், அந்தப்பகுதியில் திரண்டனர். தலைமை ஆசிரியர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வர முடிவு செய்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘11 ஆண்டுகளாக சிவகுமார் இந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். அவர் வரும்போது இங்கு படித்த மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக இருந்தது. தற்போது 286 பேர் படித்து வருகின்றனர். அதற்கு அவரது தீவிர முயற்சியே காரணம். தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல்வேறு பணிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார். இந்த வட்டாரத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வந்து ஆர்வத்துடன் சேரும் ஊராட்சி பள்ளியாகவும் இது உள்ளது. இதற்கு காரணமான தலைமை ஆசிரியரை மாற்றக்கூடாது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும். எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இது குறித்து வன்னி யனூரில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட செல்கிறோம்’’ என்றனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மேட்டூர் தாசில்தார் முத்துராஜா மற்றும் மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் கருப்பு கொடி கட்டிய மக்கள்: சேலம் அருகே 4 நாட்களாக பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Mettur ,Vannianur ,Mallikundham panchayat ,Mecheri ,Panchayat Union Middle School ,Dinakaran ,
× RELATED தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு